போலீஸ்போல் நடித்து விடுதிக்குள் புகுந்து செல்போன்கள் திருடிய 3 பேர் கைது - ஒருவருக்கு வலைவீச்சு


போலீஸ்போல் நடித்து விடுதிக்குள் புகுந்து செல்போன்கள் திருடிய 3 பேர் கைது - ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Feb 2020 4:15 AM IST (Updated: 28 Feb 2020 11:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலீஸ்போல் நடித்து விடுதிக்குள் புகுந்து செல்போன்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணபதி,

கோவை அருகே உள்ள அத்திப்பாளையம் சாலையில் தனியார் விடுதிகள் அதிகளவில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போலீஸ் சீருடை அணிந்த 4 பேர் அங்குள்ள ஒரு விடுதிக்குள் புகுந்தனர். அங்கு இருந்த நிர்வாகியிடம், நாங்கள் கஞ்சா விற்பனையை தடுக்கும் சிறப்பு பிரிவை சேர்ந்த போலீஸ் என்றும், உங்கள் விடுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. எனவே ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் அந்த விடுதியில் உள்ள ஒவ்வொரு அறைகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். பிறகு அங்கிருந்த 3 செல்போன்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அங்கிருந்த நிர்வாகியிடம், 3 செல்போன்களை எடுத்து உள்ளோம், இந்த செல்போன்கள் யாருடையதோ அவர்களை போலீஸ் நிலையம் வந்து வாங்கிக்கொள்ள சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் செல்போன்களின் உரிமையாளர்கள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறினார்கள். அதை கேட்டதும் அங்கிருந்த போலீசார் நாங்கள் யாரும் சோதனை செய்யவில்லை என்று கூறினார்கள். அப்போதுதான் போலீஸ் போன்று நடித்து விடுதியில் சோதனை செய்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் போலீஸ் போல் நடித்து விடுதிக்குள் புகுந்து செல்போன்களை திருடியது டிராபிக் வார்டன்களான (போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தன்னார்வலர்) கோவை காரமடையை சுரேஷ்குமார் (வயது 23), சுகுமார் (41), கண்ணன் (27), வினோத் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சுரேஷ்குமார், சுகுமார், கண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வினோத்தை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறும்போது, தலைமறைவாக இருக்கும் வினோத் சப்-இன்ஸ்பெக்டர் போன்று சீருடை அணிந்துள்ளார். மற்ற 3 பேரும் போலீஸ் போன்று சீருடை அணிந்து விடுதிக்குள் சென்று போலீஸ் போல் நடித்து செல்போன்களை திருடி உள்ளனர். மேலும் இவர்கள் வேறு எந்த பகுதியிலாவது இதுபோன்று நடித்து நகை, பணத்தை திருடி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Next Story