காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் முற்றுகை


காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் முற்றுகை
x
தினத்தந்தி 29 Feb 2020 3:30 AM IST (Updated: 29 Feb 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ஜோதிபாசு என்பவர் மீது பொய்வழக்கு போட்டு அடித்து துன்புறுத்தியதாக கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் மீதுபுகார் கூறப்படடது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிப்ரவரி 28-ந்தேதி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அறிவித் திருந்தனர். அதன்படி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, மாநில துணை தலைவர் ஆனந்தன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.ஏழுமலை உள்பட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஜோதிபாசுவை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் 2 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுப்புவேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தீண்டாடை ஒழிப்பு முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதுடன் ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக் கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கள்ளக்குறிச்சி ராமநாதன், ஜெயச்சந்திரன், திருக்கோவிலூர் மகே‌‌ஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தியதோடு, அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிரண்குராலா இல்லாததால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் 5 பேரை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story