விழுப்புரம், கள்ளக்குறிச்சியில், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க.வினர் பேரணி


விழுப்புரம், கள்ளக்குறிச்சியில், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க.வினர் பேரணி
x
தினத்தந்தி 29 Feb 2020 3:45 AM IST (Updated: 29 Feb 2020 12:24 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினர்.

விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிற நிலையில் இந்த சட்டம் வேண்டும் என்றும் இந்த சட்டத்தினால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை வலியுறுத்தியும், இச்சட்டத்தை ஆதரித்தும் பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரத்தில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், அமைதிக்கு ஊறு விளைவிக்கும் போராட்டங்களை கண்டித்தும், அதுபோன்ற போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரியும் பா.ஜ.க. சார்பில் பேரணி நடைபெற்றது. விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி நேருஜி சாலை, பூந்தோட்டம் பாதை, ரங்க நாதன் சாலை, திருச்சி மெயின்ரோடு வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் முடிவடைந்தது.

இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், இந்த சட்டத்தினால் இந்தியர்கள் அனைவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

மேலும் பேரணியில் பங்கேற்றவர்கள், பொய் பிரசாரம் செய்யாதே, வன்முறையை தூண்டாதே, மத ஒற்றுமையை பிரிக்காதே என்று எதிர்க்கட்சிகளை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பியபடி சென்றனர்.

இப்பேரணி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முடிவடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாண்டியன், ராம.ஜெயக்குமார், பொருளாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன் வரவேற்றார். மாநில செயலாளர் கரு.நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் அறிவுசார் பிரிவு மாவட்ட தலைவர் தனசேகரன், வணிகர் அணி கோட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் விநாயகம், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் சதா சிவம், கோதண்டபாணி, ராஜிலு, மாவட்ட செயலாளர்கள் துரை.சக்திவேல், மூர்த்தி, அரிகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் நகர தலைவர் ஜெயசங்கர் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் பா.ஜ.க.வினர், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருபவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. சார்பில் பேரணி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் போராட்டங்களை கண்டித்தும், அதுபோன்ற போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரியும் பேசினார். இதையடுத்து பா.ஜ.க.வினர் அங்கிருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக சென்று, கலெக்டர் கிரண்குராலாவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன், மாவட்ட துணை தலைவர் ராஜே‌‌ஷ், கோட்ட இணை பொறுப்பாளர் அருண், நகர தலைவர் சர்தார் சிங், முன்னாள் மாவட்ட தலைவர் தாமோதரன் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணியின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story