பரனூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூல் 35 நாள் இலவச பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது


பரனூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூல் 35 நாள் இலவச பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது
x
தினத்தந்தி 29 Feb 2020 4:15 AM IST (Updated: 29 Feb 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

பரனூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் 35 நாள் இலவச கட்டணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த மாதம் 26-ந் தேதியன்று சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் சக அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சை குறுக்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பஸ் பயணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு பரனூர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.

இதனால் அங்கிருந்த கண்ணாடி கதவுகள் தடுப்பு கம்பிகள், வயர்கள் என அனைத்தும் சேதமடைந்தன. மேலும் அன்றைய தினம் வசூலான பணத்தையெல்லாம் வாரி இறைத்து விட்டு அமர்க்களம் செய்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுங்கச்சாவடி ஊழியர் ஆலப்பாக்கம் ஊராட்சி இருங்குன்றம் பள்ளியைச் சேர்ந்த விஜயபாபு என்பவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். போராட்டத்தின்போது அன்றைய தினம் வசூலான ரூ.18 லட்சத்தை காணவில்லை என்று புகார் கொடுத்தார். பின்னர் பணம் காணாமல் போகவில்லை பதற்றத்தில் அலுவகத்தில் உள்ள லாக்கரை மறந்து விட்டோம் என்று கூறி சுங்கச்சாவடியினர் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினர். மேலும் சுங்கச்சாவடி பணத்தை திருடிச்சென்றதாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 26-ந் தேதி முதல் கட்டணம் எதுவும் வசூல் செய்யப்படாத நிலையில் அனைத்து வாகனங்களும் இலவசமாகவே சென்றன. தற்போது பரனூர் சுங்கச்சாவடி மறு சீரமைக்கப்பட்டு புதுபொலிவுடன் காணப்படுகிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 35 நாட்கள் இலவச பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. பரனூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Next Story