பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது, 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக வனத்துறை தகவல்
மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. அதில் இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்,
ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் பறவைகளை கணக்கெடுப்பது வழக்கம். அதன்படி கணக்கெடுப்பு பணி நேற்றும், இன்றும் (சனிக்கிழமை) மாவட்டத்தில் பறவைகள் சரணாலயங்கள் மற்றும் தீவுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் நீர் நிலைகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது.
இதற்காக பறவைகள் ஆய்வு வல்லுனர்கள் 8 பேர் உதவியுடன் அந்தந்த வனச்சரக கட்டுப்பாட்டு பகுதிகளில் காலை முதல் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. ராமநாதபுரம் வனச்சரக கட்டுப்பாட்டு பகுதியில் உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனச்சரகர் சதீஷ்குமார் உள்ளிட்டோரும், மண்டபம் வனச்சரக பகுதியில் வன உயிரின காப்பாளர் மாரிமுத்து தலைமையில் வனச்சரகர் வெங்கேடஷ் உள்ளிட்டோரும், கீழக்கரையில் மாவட்ட வன அலுவலர் அருண்குமார் தலைமையில் வனச்சரகர் சிக்கந்தர்பாட்சா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பறவைகளை கணக்கெடுத்தனர்.
ராமநாதபுரம் பெரியகண்மாய், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை ஆகிய பகுதிகளிலும், கீழக்கரையில் மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் பகுதிகளிலும், மண்டபத்தில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமர்கோவில், முனைக்காடு, பிள்ளைமடம் ஆகிய பகுதிகளிலும் இந்த கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது.
கணக்கெடுப்பு குழுவினருடன் பயிற்சி வனச்சரகர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற கணக்கெடுப்பில் இந்த வருடம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தேடி இனப்பெருக்கத்திற்காக 20 சதவீதத்திற்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளதாக தெரியவந்தது.
குறிப்பாக 15 சதவீதம் கூடுதல் வகைகளிலான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளது. இதற்கு காரணம் மாவட்டதில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் பறவைகளுக்கு தேவையான புழு, பூச்சிகள், தானியங்கள் அதிக அளவில் கிடைப்பதால் இந்த ஆண்டு அதிக அளவிலான பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரத்திற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று தீவு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் முழுமையான அளவில் பறவைகள் எண்ணிக்கை வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story