அவினாசி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்; 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
அவினாசி அருகே தினசரி வழக்கம்போல் பழைய வழித்தடத்தில் பஸ் விடவேண்டும் என்று பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவினாசி,
அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், முதியோர் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு இந்த வழியாக வரும் அரசு பஸ் பயன்பாட்டில் இருந்தது.
இந்த டவுன் பஸ் கருமத்தம்பட்டி, கிட்டாம்பாளையம், உப்பிலிபாளையம், கருவலூர் வழியாக அவினாசி செல்கிறது .இந்த நிலையில் தற்போது உப்பிலிபாளையம் வழியாக தினசரி 2 முறை மட்டுமே பஸ் வருவதாக கூறி நேற்றுகாலை அப்பகுதிக்கு வந்த அரசு டவுன் பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த கிராமத்திலிருந்து தொழிலாளர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அவினாசி, திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக தினசரி 8 முறை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசு பஸ் உப்பிலிபாளையம் பகுதிக்கு தற்போது தினசரி 2 முறை மட்டுமே வருகிறது. இதனால் மாலை நேரத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவியர், வேலைக்கு செல்வோருக்கும் போதிய பஸ் வசதி இல்லாமல் பல மாத காலமாக சிரமப்பட்டு வருகிறோம்.
எனவே பொதுமக்கள் நலன்கருதி மீண்டும் இவ்வழித்தடத்தில் முன்பு போலவே பஸ் போக்குவரத்தை இயக்க வேண்டும் என்று கருமத்தம்பட்டியில் உள்ள அரசு பஸ் பணிமனை மேலாளரிடம் எங்களது கோரிக்கையை தெரிவித்தோம். ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பஸ்சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அவினாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் பணிமனை அதிகாரி இங்கு வந்து எங்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் வழக்கம்போல் பஸ்சை இயக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கருத்தம்பட்டி அரசு பஸ் பணிமனை மேலாளர் சுரேந்தர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின், உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித்து இன்னும் 2, 3, நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி கூறினார்.
இதையடுத்து பொதுமக்கள் அரசு பஸ்சை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story