சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில்   1½ கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:30 PM GMT (Updated: 28 Feb 2020 8:54 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 635 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த புதுக்கோட்டையைச்சேர்ந்த அகமது கனி (வயது 32), சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி(20), மதுரையைச் சேர்ந்த ரகுமான்கான்(22) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.33 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள 766 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த முகமது நஸ்லீன்(20), ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா(38) ஆகிய 2 பேர் வந்தனர். இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 577 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

1½ கிலோ தங்கம்

மேலும் கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சுல்பீகர் அலி(37) என்பவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 292 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 6 பேரிடம் இருந்து ரூ.71 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 635 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவர்கள் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 6 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story