குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் இயக்குனர் கஸ்தூரி ராஜா பங்கேற்றார்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக திருவள்ளூரில் நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக திருவள்ளூரில் உள்ள காமராஜர் சிலை அருகே நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு பா.ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் லோகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரன் அஸ்வின், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா, திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனரும், மாநில பொறுப்பாளருமான கஸ்தூரிராஜா கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக பொதுமக்களை தவறாக வழிநடத்தும் கட்சிகளை கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினார்.
இப்பேரணியில் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் காமராஜர் சிலையில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று குடியுரிமை திருத்த சட்டத்தின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறினர்.
பின்னர் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமியிடம் மனு அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story