மன்னார்குடி அருகே பரிதாபம்: அண்ணனை பள்ளிக்கு வழியனுப்ப வந்த 2½ வயது குழந்தை வேன் மோதி பலி


மன்னார்குடி அருகே பரிதாபம்: அண்ணனை பள்ளிக்கு வழியனுப்ப வந்த 2½ வயது குழந்தை வேன் மோதி பலி
x
தினத்தந்தி 29 Feb 2020 4:37 AM IST (Updated: 29 Feb 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே அண்ணனை பள்ளிக்கு வழியனுப்ப வந்த 2½ வயது குழந்தை வேன் மோதி பலியானான். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஏத்தக்குடி கிராமம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயி. இவருடைய மனைவி சுகன்யா. இவர்களது மூத்த மகன் ஆர்யா(வயது 4), 2-வது மகன் ஹர்சன்(2½). இவர்களில் ஆர்யா, வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் சோழபாண்டியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

ஆர்யா, தினமும் பள்ளிக்கு தனியார் வேன் மூலம் சென்று வருவது வழக்கம். நேற்று காலை சுகன்யா தனது மகன் ஆர்யாவை பள்ளிக்கு வேனில் ஏற்றி விடுவதற்கு 2 மகன்களையும் தன்னுடன் அழைத்து வந்தார்.

வேன் வந்ததும் சுகன்யா, ஆர்யாவை வேனில் ஏற்றி விட்டு புத்தகப்பையை கொடுத்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை ஹர்ஷன், வேனின் முன்னால் சென்று விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.

இதனை கவனிக்காத டிரைவர், வேனை இயக்கியபோது குழந்தை ஹர்‌‌ஷன் மீது வேனின் முன்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவர் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

உயிரிழந்த குழந்தை ஹர்சனின் உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அண்ணனை பள்ளிக்கு வழியனுப்ப சென்ற 2½ வயது குழந்தை வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Next Story