நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், விவசாயிகளிடம் இருந்து மூடைக்கு ரூ.50 வசூல் - குறைதீர் கூட்டத்தில் புகார்

மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யவரும் விவசாயிகளிடம் இருந்து அதிகாரிகள் மூடைக்கு ரூ.50 வசூல் செய்வதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் செய்யப்பட்டது.
சிவகங்கை,
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் வடிவேல், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கியசுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சர்மிளா மற்றும் அதிகாரிகளும், விவசாயிகள் சார்பில் மோடிபிரபாகரன், சந்திரன், கன்னியப்பன், பரத்ராஜா, மணல்மேடுராஜா, தண்டியப்பன், ஆதிமூலம், முத்துராமலிங்கம், அய்யாச்சாமி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, முப்பையூர் பள்ளியில் உள்ள சமையல் கூடம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் செல்ல மாணவர்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். திருப்புவனம் பெத்தானேந்தல் பகுதியில் உள்ள விவசாயிகள் பலருக்கு இன்னும் கடன் அட்டை கிடைக்கவில்லை. அதை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்புவனம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பல இடங்களில் முறைகேடு நடக்கிறது. நெல்லை விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் இருந்து நிலைய அதிகாரிகள் மூடைக்கு ரூ.50 வரை வாங்குகின்றனர். திருப்புவனத்தில் வாரச்சந்தைக்கு இடம் இல்லாமல் ரோட்டில் சந்தை நடக்கிறது. அத்துடன் அப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்கவும் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-
திருப்புவனத்தில் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து மடப்புரத்தில் உள்ள அரசு இடத்தில் வைத்து பேரூராட்சி மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் வாரச்சந்தை மற்றும் பஸ் நிலையத்திற்கு தேவையான இடம் ஒதுக்கி தரப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் போது பணம் கேட்டால் விவசாயிகள் கொடுக்க வேண்டாம். அதுபற்றி நுகர்பொருள் வாணிப கழகத்தில் புகார் செய்யுங்கள். தற்போது கூட இதுபோல் வந்த புகாரின் பேரில் 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பல்வெறு பொருட்களின் மீது விவாதம் நடைபெற்றது.
கூட்டம் நடைபெறும்போது அங்கிருந்தவர்கள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை மட்டுமே பேச வேண்டும் மற்றவைகள் குறித்து பேசக்கூடாது என்றனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story