தகுதிநீக்க விவகாரம்: சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனவேலு எம்.எல்.ஏ. பதில் மனு சாட்சிகளிடம் விசாரிக்க வலியுறுத்தல்


தகுதிநீக்க விவகாரம்: சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனவேலு எம்.எல்.ஏ. பதில் மனு சாட்சிகளிடம் விசாரிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Feb 2020 5:25 AM IST (Updated: 29 Feb 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

தகுதிநீக்க விவகாரம் தொடர்பாக சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனவேலு எம்.எல்.ஏ. பதில் மனு தாக்கல் செய்தார். சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசு மீது பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடியை சந்தித்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை பட்டியலிட்டார். அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தினார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே அரசுக்கு எதிராக திரும்பிய விவகாரம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து தனவேலு எம்.எல்.ஏ. இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த பாப்ஸ்கோ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் (எம்.எல்.ஏ. பதவியை பறிக்க) என்று சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. கடிதம் கொடுத்தார்.

இந்த புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் சிவக்கொழுந்து கடந்த 7-ந்தேதி தனவேலு எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு பதில் அனுப்புவது குறித்து பிரபல வக்கீல்களுடன் தனவேலு எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்தை சந்தித்து பேசினார்.

அப்போது தகுதிநீக்க நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க 2 வாரம் அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தார். இதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து அவகாசம் அளித்தார். நேற்றுடன் இந்த கெடு முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் காத்திருந்த தனவேலு எம்.எல்.ஏ., மதியம் 12.40 மணியளவில் தனது வக்கீல்களுடன் சபாநாயகர் சிவக்கொழுந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவரிடம், தன்னுடைய விளக்கத்தை எழுத்துபூர்வமாக தனவேலு எம்.எல்.ஏ. அளித்தார்.

இது குறித்து தனவேலு எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போதுமான மருந்துகள் கையிருப்பு இல்லை. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கிடையாது. டிரைவர்கள் இருந்தாலும் டீசல் இல்லை. எனவே இதனை கண்டித்து பொதுமக்களின் நலனுக்காக போராட்டம் நடத்தியதால் என்னை தகுதிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார்கள். இந்த நிலையில் எனக்கு அனுப்பிய நோட்டீசில் ஒரு சி.டி., பத்திரிகை செய்திகள், அரசு கொறடா அளித்த புகார் ஆகியவற்றை சாட்சியாக வைத்து விளக்கம் கேட்டிருந்தனர்.

அதற்கு விளக்கம் அளிக்க கேட்டிருந்த அவகாசம் இன்றுடன்(நேற்று) முடிவடைகிறது. எனவே நான் சபாநாயகர் சிவக்கொழுந்தை சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். அதனை பெற்றுக்கொண்ட சபாநாயகர் பதில் அளிப்பதாக கூறியுள்ளார்.

என் மீது குற்றம் சுமத்திய சாட்சிகளை எனது முன்னிலையில் விசாரணை, குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளேன். அவர்கள் அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உடனடியாக என்மீது சட்டப்படி கண் மூடித்தனமாக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை ஆதாரங்களுடன் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story