அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேசியபோதே தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி கேட்கப்பட்டது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேசியபோதே தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி கேட்கப்பட்டது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 29 Feb 2020 4:15 AM IST (Updated: 29 Feb 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேசியபோதே தே.மு.தி.க.வுக்கு ஒரு எம்.பி. பதவி கேட்கப்பட்டது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி,

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரவேண்டும் என அ.தி.மு.க.விடம் கேட்டு இருக்கிறோம். தொடர்ந்து இதை வலியுறுத்தியும் வருகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது இது ஆரம்பத்திலேயே கேட்கப்பட்ட விஷயம் தான். தலைமை கழகத்தில் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை சொல்வதாக முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். எனவே அவர்களிடம் இருந்து நல்ல பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அதனுடன் கூட்டணி சேருவீர்களா? என கேட்கிறார்கள். முதலில் அவர் (ரஜினிகாந்த்) கட்சி ஆரம்பிக்கட்டும் பார்ப்போம். அப்போது இதற்கான பதிலை நான் சொல்கிறேன். டெல்லி கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்விதான் காரணமா? என்பதற்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என்பது தான் எனது பதில்.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் மக்களிடம் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.

ஆனால் தமிழகத்தில் இது இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான விஷயம் என திசை திருப்பப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இப்படி பேசி வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால் தான் டெல்லியில் பல உயிர்களை இழந்து இருக்கிறோம். இதற்கு யார் பொறுப்பேற்பது?

அதனால் மக்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். புரியவைக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற உறுதியை மத்திய, மாநில அரசுகள் தந்து மக்களை புரியவைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். அது தவறானதாகும்.

துப்பாக்கி எடுத்துக்கொண்டு வெட்ட வெளியில் சுடுகிறார்கள். இதனை எப்படி எடுத்துக்கொள்வது? நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம், தமிழ்நாட்டில் பிரச்சினை இல்லை. மேற்கு வங்காளத்தை எடுத்துக்கொண்டால் எவ்வளவு பேர் வங்காளதேசத்தில் இருந்து வருகிறார்கள், தங்குகிறார்கள். நாமே ஒரு வெளிநாட்டுக்கு போகிறோம் என்றால் ‘விசா’ இல்லாமல் அந்த நாட்டிற்குள் நுழைய முடியுமா? நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இதில் நமது நாடு முக்கியம், பாதுகாப்பு முக்கியம் என்பதை புரிந்து கொண்டால் இந்த குழப்பம் இருக்காது. ஆனால் இங்கே வாழக்கூடிய எந்த ஒரு சிறுபான்மையினருக்கும், இஸ்லாமிய குடும்பத்துக்கும் பாதிப்பு வருகிறது என்றால் முதல் கட்சியாக தே.மு.தி.க. களத்தில் இறங்கும். யாருக்கும் பாதிப்பு வராது என முதல்-அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் கூறுவது தவறான கருத்து.

தமிழக பட்ஜெட்டில் கடனை ஏற்றிக்கொண்டே செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டி இருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் விட்டுச் சென்ற ரூ.1 லட்சம் கோடி கடனுக்கு தாங்கள் வட்டி கட்டி வருவதாக முதல்-அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இப்படி போட்டிபோட்டு கடனை ஏற்றிக்கொண்டே செல்வதை விட்டுவிட்டு, கடனை குறைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை தரக்கூடிய நல்ல பட்ஜெட்டை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story