காவிரி- குண்டாறு திட்டத்தில் மணப்பாறை பகுதிகளை சேர்க்க கோரி - கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காவிரி- குண்டாறு திட்டத்தில் மணப்பாறை பகுதிகளை சேர்க்க கோரி - கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:15 PM GMT (Updated: 29 Feb 2020 12:51 AM GMT)

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தில் மணப்பாறை பகுதிகளை சேர்க்கவேண்டும் என கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் அதில் பங்கேற்ற விவசாய சங்க தலைவர்கள் திடீரென வெளியேறி கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி பகுதிகளை சேர்க்க வேண்டும், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாய சங்க தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் பேசியதாவது:-

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல சங்க செயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன்:- கட்டளை மேட்டு வாய்க்காலை தூர்வாரி நவீனப்படுத்தும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. மாயனூர் முதல் தாயனூர் வரை உள்ள அனைத்து மதகுகளையும் சீரமைத்து, கடைமடை பகுதி வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நவீனப்படுத்தும் பணிகளை விரைவாக தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் அயிலை சிவசூரியன்:- உய்யகொண்டான், கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட திருச்சி மாவட்ட பாசன வாய்க்கால்களில் மே மாதம் இறுதி வரை தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், உய்யகொண்டான் வாய்க்கால்களில் எட்டரை கோப்பு பாலம் அருகே ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும், கோப்பு முதல் புலிவலம் மணல் போக்கி வரை குண்டும் குழியுமாக உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் கரை தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன்:- திருச்சியில் கால்நடை தீவன பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். யு.டி.ஆர். திருத்தம், தனிப்பட்டா வழங்குதல், நில அளவைக்கு பணம் கட்டி காத்திருக்கின்ற விவசாயிகளின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், லால்குடி அருகே அழகிய மணவாளம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே குரங்குகளை பிடித்து காட்டில் விட வனத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிடவேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வழங்கும் நெல்லுக்கு தாமதம் இன்றி உடனுக்குடன் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க அமைப்பு செயலாளர் தர்மராஜ்:- திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்தது போல் நடப்பு ஆண்டில் விடுபட்ட பகுதிகளை கண்டறிந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஆறு, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும். லால்குடி ரவுண்டானா மைய பகுதியில் மீண்டும் காந்தி சிலை அமைக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

Next Story