முதியவரை கொலை செய்த தந்தை-2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை
முதியவர் கொலை வழக்கில் தந்தை-2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கோடியம்பாளையம் கூத்தன் செட்டியார் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவரது தம்பி மாணிக்கம் (வயது 62). அண்ணன்- தம்பி இடையே சாக்கடை கால்வாய் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 4-6-2016 அன்று மாலை முருகன் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்கடை கழிவு நீர் மாணிக்கம் வீட்டின் முன் தேங்கி நின்றது.
இது தொடர்பாக மாணிக்கம், அவரது மகன்கள் மணிவேல் (32), வெற்றிவேல் (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து முருகனிடம் ‘ஏன் சாக்கடை கழிவு நீரை எங்கள் வீட்டின் வழியாக வெளியேற்றினாய்?’ என கேட்டு தகராறு செய்தனர். பின்னர் அவரை அரிவாளால் வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக தொட்டியம் போலீசார் மாணிக்கம் உள்பட 3 பேரையும் கைது செய்து திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கம், மணிவேல், வெற்றிவேல் ஆகிய 3 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story