தினத்தந்தி செய்தி எதிரொலி: புளியரை பகுதியில் உணவுக்காக கேரள அரசு பஸ்களை நிறுத்த தடை போக்குவரத்துத்துறை உத்தரவு
தென்காசி மாவட்டம் புளியரை பகுதி தமிழக–கேரள எல்லையில் உள்ளது.
தென்காசி,
‘‘தினத்தந்தி‘‘ செய்தி எதிரொலியால் புளியரை பகுதியில் உணவுக்காக கேரள அரசு பஸ்களை நிறுத்த தடை விதித்து அம்மாநில போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
பயணிகள் அவதி
தென்காசி மாவட்டம் புளியரை பகுதி தமிழக–கேரள எல்லையில் உள்ளது. இதனால் வியாபாரம், சுற்றுலா தொடர்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் தினமும் இந்த வழியாக தென்காசி வந்து செல்கின்றனர். இதேபோல் தென்காசி, செங்கோட்டையில் இருந்து பல்வேறு பணிகளுக்காக கேரளாவிற்கும் பொதுமக்கள் சென்று வருகிறார்கள். தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் இருந்து வங்கிகள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தமிழ்வழி கல்வி ஆசிரியர்கள் தினமும் கேரளா சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் காலையில் 8.15 மணிக்கு தென்காசியில் இருந்து கேரளாவிற்கு புறப்படும் கேரள அரசு பஸ்கள் புளியரை வந்த சிறிது நேரத்தில் அங்கு ரோட்டோர கடைகளில் உணவுக்காக நிறுத்தப்படுகின்றன. மீண்டும் பஸ்கள் புறப்பட அரை மணி நேரம் தாமதம் ஆகிறது. இதனால் பணிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.
இதுகுறித்து செங்கோட்டை காலாங்கரையை சேர்ந்த இசக்கி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதில், அவ்வாறு பஸ்கள் நிறுத்த அனுமதி இல்லை என பதில் கிடைத்தது. மேலும் இதுகுறித்து கேரள பத்திரிகைகள் பல மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“தினத்தந்தி“ செய்தி எதிரொலி
இந்த சூழலில் “தினத்தந்தி‘“–யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து செய்தி விரிவாக வெளியானது. இந்த செய்தி வெளியான 2 நாட்களில் கேரள அரசு திருவனந்தபுரம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் உடனடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தென்காசியில் இருந்து புறப்படும் கேரள அரசு பஸ்கள் புளியரை மற்றும் மடத்தர பகுதிகளில் தேவையில்லாமல் கடைகளில் நிறுத்தக்கூடாது. இதுகுறித்து பத்திரிகைகளில் புகார் கூறி செய்திகள் வெளியாகி உள்ளன. தென்காசியில் இருந்து புறப்பட்ட 10 கி.மீ. தூரத்தில் உள்ள புளியரையில் அரை மணிநேரம் பஸ்கள் நிற்பதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இது கேரள அரசு போக்குவரத்து கழகத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இந்த இடங்களில் தேவை இல்லாமல் உணவுக்காக பஸ்களை நிறுத்தக்கூடாது என இதன்மூலம் உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை
இதையடுத்து கேரள போக்குவரத்துக்கழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி அனில் குமார் தலைமையில் அதிகாரிகள் புளியரையில் முகாமிட்டு இதனை கண்காணித்தனர். தற்போது பஸ்கள் புளியரை பகுதியில் நிறுத்தப்படுவது இல்லை.
இதுகுறித்து செங்கோட்டையை சேர்ந்த இசக்கி கூறுகையில், ‘‘கேரள பத்திரிக்கைகளில் பலமுறை இதுகுறித்து செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “தினத்தந்தி“–யில் செய்தி வெளியானதும் உடனடியாக போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இங்கிருந்து செல்பவர்கள் நன்மை அடைகிறார்கள். இதற்காக “தினத்தந்தி“–க்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்த கேரள போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் பயணிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‘‘ என்றார்.
Related Tags :
Next Story