குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தர்ணா போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2020 3:45 AM IST (Updated: 29 Feb 2020 9:34 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி தர்ணா போராட்டம் நடந்தது.

பெரம்பலூர், 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் கணபதி நகர், புது ஆத்தூர் மற்றும் லெப்பைக்குடிகாடு பஸ் நிறுத்தம் என 3 பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காலை முதல் மதியம் வரை தர்ணா போராட்டம் நடந்தது. 

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள கணபதி நகரில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவர் ராஜா முகம்மது தலைமை தாங்கினார். நகர கிளை தலைவர் ஜாகிர் ஹுசைன் முன்னிலை வகித்தார். மாவட்ட பேச்சாளர் யாசீர் முகம்மது சிறப்புரையாற்றினார். 

இதே போல் புது ஆத்தூரில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம், கிளை செயலாளர் அ‌‌ஷ்ரப் அலி முன்னிலை வகித்தனர்.

லெப்பைக்குடிக்காடு பஸ் நிலையத்தில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை தலைவர் ‌‌ஷபியுல்லாஹ் தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் அப்துல் நாஸர், கிளை செயலாளர் ‌ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பைசல் சிறப்புரையாற்றினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பகுதிகளில் நடந்த இந்த தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என்பதனை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். 

மேலும் தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தி கோ‌‌ஷத்தை எழுப்பினர். 

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை கணபதி நகரில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சாமியானா பந்தல் அமைத்ததை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாமியானா பந்தல் அமைக்க அனுமதியளித்தனர்.

Next Story