போலீஸ்காரரை அடித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை - செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


போலீஸ்காரரை அடித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை - செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 March 2020 6:22 AM IST (Updated: 1 March 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து போலீஸ்காரரை அடித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

மும்பையில் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வந்தவர் விலாஸ் ஷிண்டே (வயது52). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் கார் பகுதியில் உள்ள எஸ்.வி. ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக 17 வயது வாலிபர் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். போக்குவரத்து போலீஸ்காரர், அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்த சொல்லி விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் ஹெல்மட் மட்டுமின்றி ஓட்டுனர் உரிமம், மோட்டார் சைக்கிள் ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து போக்குவரத்து போலீஸ்காரர் விலாஸ் ஷிண்டே மோட்டார் சைக்கிளின் சாவியை பறித்து கொண்டு, வீட்டில் உள்ள பெரியவர்களை வர சொல்லுமாறு வாலிபரிடம் கூறினார்.

இதையடுத்து அந்த வாலிபர் தனது அண்ணன் அகமது குரேசிக்கு (வயது23) போன் செய்து அழைத்தார். அப்போது கையில் மூங்கில் கம்புடன் அங்கு வந்த அகமது குரேசி போக்குவரத்து போலீஸ்காரரை சரமாரியாக தலையில் அடித்தார். இதில் விலாஸ் ஷிண்டே நிலைகுலைந்து தரையில் விழுந்தார்.

அப்போது அகமது குரேசி மற்றும் 17 வயது வாலிபர் போக்குவரத்து போலீஸ்காரரை காலால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் சாவியை பறித்து கொண்டு தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த போக்குவரத்து போலீஸ்காரர் விலாஸ் ஷிண்டே ஒரு வாரத்துக்கு பிறகு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்கள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் நிறைவேற்றினார்.

இந்தநிலையில் போக்குவரத்து போலீஸ்காரர் விலாஸ் ஷிண்டே கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அகமது குரேசி மற்றும் அவரது தம்பியான 17 வயது வாலிபரை கைது செய்தனர். இதில் 17 வயது வாலிபர் மைனர் என்பதால் அவா் மீதான வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது.

அகமது குரேசி மீதான வழக்கு விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது சம்பவத்தை நேரில் பார்த்த 3 பேர் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்து இருந்தனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிந்து அகமது குரேசி குற்றவாளி என நேற்று முன்தினம் நீதிபதி கிஷோர் ஜெய்ஸ்வால் அறிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து போலீஸ்காரரை அடித்து கொலை செய்த அகமது குரேசிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பை கூறினார்.

Next Story