நெல்லை அருகே சுய உதவிக்குழு பணியாளரை மிரட்டி பணம் பறிப்பு; வாலிபர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு


நெல்லை அருகே சுய உதவிக்குழு பணியாளரை மிரட்டி பணம் பறிப்பு; வாலிபர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 March 2020 3:00 AM IST (Updated: 1 March 2020 8:05 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே சுய உதவிக்குழு பணியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை அருகே சுய உதவிக்குழு பணியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பேஸ்புக் மூலம் நட்பு 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணபெருமாள் (வயது 24). இவர், செய்துங்கநல்லூரில் உள்ள கிராம சுய உதவிக்குழுவில் பணியாற்றி வருகிறார். இவரும், நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்த இசக்கிராஜ் என்பவரும், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகினர். நேரில் பார்க்காமலே பழகி வந்தனர். பின்னர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரில் பார்த்து நட்பை பரிமாரிக் கொண்டனர்.

கத்தியை காட்டி மிரட்டி 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இசக்கிராஜ், கிருஷ்ண பெருமாளை தாழையூத்தில் உள்ள நான்கு வழிச்சாலைக்கு வரச்சொன்னார். நண்பரின் பேச்சை நம்பி கிருஷ்ணபெருமாள் அங்கு வந்தார். அவருடன் இசக்கிராஜ் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த இசக்கிராஜ் நண்பர்கள் 4 பேர் ஓடி வந்து கிருஷ்ண பெருமாளை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

கிருஷ்ணபெருமாளிடம் இருந்த ஏ.டி.எம். கார்டு, செல்போனை பறித்தனர். ஏ.டி.எம்.கார்டு மூலம் ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று ரூ.18 ஆயிரத்தை எடுத்து விட்டு தப்பி சென்றனர்.

வாலிபர் கைது 

இதுகுறித்து கிருஷ்ண பெருமாள் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக தாழையூத்து ராம்நகரை சேர்ந்த கார்த்திக் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

Next Story