கோவையில், 16 வயது சிறுமிக்கு திருமணம்; கணவர் உள்பட 4 பேர் போக்சோவில் கைது - கடத்தி சென்ற கள்ளக்காதலனும் சிக்கினார்
கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த கணவர் உள்பட 4 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். அந்த சிறுமியை கடத்தி சென்ற கள்ளக்காதலனும் போலீசில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை என்.எச்.ரோடு திருமால் வீதியை சேர்ந்தவர் முகமது நிசார் (வயது 28). இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கோவையில் திருமணம் நடந்தது. பின்னர் கணவனும் மனைவியும் கோவையில் ஒரு வீட்டில் தனியாக வசித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த பெண் பயன்படுத்திய செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து முகமது நிசார் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். அதில், எனக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது வீட்டின் அருகே வசித்து வந்த நபர் ஒருவர் எனது மனைவியிடம் அடிக்கடி பேசினார்.
தற்போது அந்த நபரையும், எனது மனைவியையும் காணவில்லை. எனவே அந்த நபர் எனது மனைவியை கடத்திச்சென்று இருக்க வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது முகமது நிசார், 16 வயது சிறுமியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ததும், கோவையில் அவர்களின் வீட்டின் அருகே வசித்த திருச்சி மாவட்டம் மணப்பாறை கல்பட்டி சத்திரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரஞ்சித்குமாருக்கும், அந்த சிறுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு திருச்சிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
16 வயது சிறுமியை திருமணம் செய்ததால் இந்த வழக்கு கோவை மாநகர மேற்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து முகமது நிசார், அவருடைய தந்தை அப்துல் கலாம், தாய் பர்ஜானா, சிறுமியின் தாயார் கம்மர்தாஜ் ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அந்த பெண்ணுக்கு 16 வயதில் திருமணம் செய்து வைத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து போலீசார் திருச்சி சென்று சிறுமியை கடத்திய ரஞ்சித்குமாரை மடக்கி பிடித்து கோவை அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த முகமதுநிசார் உள்பட 4 பேர் மற்றும் அவரை கடத்தி சென்ற ரஞ்சித்குமார் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமணம் தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story