மாதவரத்தில் ரசாயன குடோனில் எரிந்த தீயை 30 மணி நேரம் போராடி அணைத்தனர் மாவட்ட கலெக்டர் ஆய்வு


மாதவரத்தில் ரசாயன குடோனில் எரிந்த தீயை 30 மணி நேரம் போராடி அணைத்தனர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 March 2020 4:45 AM IST (Updated: 2 March 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

மாதவரத்தில் ரசாயன குடோனில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 30 மணி நேரம் போராடி அணைத்தனர். சம்பவ இடத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

செங்குன்றம்,

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே பெரம்பூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான 2 ராட்சத குடோன்கள் உள்ளன. இங்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரப்படும் ரசாயன பேரல்கள் இறக்கி வைக்கப்பட்டு, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கம்பெனிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த குடோனில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசாயன பேரல்கள் இருந்தன.

நேற்று முன்தினம் மாலை திடீரென குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியது. ரசாயன பேரல்கள் தீயில் எரிந்ததால் அந்த பகுதியில் கரும்புகை மண்டலமாக மாறியது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

அருகில் உள்ள கன்டெய்னர் யார்டுக்கும் தீ பரவியதால் அங்கிருந்த 15 லாரிகள் தீயில் எரிந்து நாசமாயின.

தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் 500 தீயணைப்பு வீரர்கள் ரசாயன குடோனில் எரியும் தீயை அணைக்க போராடினார்கள். இரவு முழுவதும் தீயணைப்பு பணி நடைபெற்றது.

நேற்று மாலை தீ முழுவதும் அணைக்கப்பட்டது. என்றாலும் ரசாயன பேரல்கள் என்பதால் எரிந்த நிலையில் கிடந்த பேரல்களில் தொடர்ந்து புகை வந்தபடியே இருந்தது. தீயணைப்பு வீரர்கள் பேரல்களை பொக்லைன் எந்திரம் மூலம் கிளறி அதில் தண்ணீரை பீய்ச்சி அடித்த வண்ணம் இருந்தனர். சுமார் 30 மணிநேர போராட்டத்துக்கு பிறகு ரசாயன குடோனில் எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். தீ விபத்தில் ரூ.150 கோடி மதிப்பிலான ரசாயன பேரல்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தீயணைப்பு பணியில் ஈடுபட்ட வீரர்களின் வசதிக்காக மாதவரம்-செங்குன்றம் ஜி.எஸ்.டி. சாலையில் ஒரு மார்க்கத்தில் மட்டுமே நேற்றும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அருகில் இருந்த பெட்ரோல் நிலையமும் மூடப்பட்டது. நேற்று முன்தினம் சம்பவ இடத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் தினகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, தீ விபத்து நடந்த ரசாயன குடோனில் நேரில் சென்று ஆய்வு செய்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதன் உரிமையாளர் ரஞ்சித் என்பவரிடம் விசாரணை நடத்தினார். அந்த குடோனில் இருந்த பாதுகாப்பு வசதிகள் குறித்தும், ஊழியர்கள் குறித்தும் அவர் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி கூறும்போது, “மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ரசாயன குடோன்களிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு நடத்தப்படும்” என்றார்.

தீ விபத்தால் மாதவரத்தை சுற்றியுள்ள மணலி, புழல், செங்குன்றம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் கரும்புகை பரவியுள்ளது. இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாஜலபதி தலைமையிலான அதிகாரிகள் நவீன கருவிகள் மூலம் தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

வெடித்து சிதறிய பேரல்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் விழுந்து கிடக்கின்றன. அவற்றை சேகரிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தீவிபத்து நடந்த இடத்துக்கு வராத வண்ணம் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுபற்றி மாதவரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து அங்கு நடைபெற்ற வெல்டிங் பணியினால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

Next Story