குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நாளை தாக்கல் ஆகிறது


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நாளை தாக்கல் ஆகிறது
x
தினத்தந்தி 2 March 2020 5:10 AM IST (Updated: 2 March 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

பெங்களூரு,

இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர்.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநிலம் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதேவேளையில் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் மாநிலமான கர்நாடக சட்டசபையில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற அக்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. வருகிற 5-ந் தேதி 2020-21-ம் ஆண்டுக்கான கர்நாடக அரசின் பட்ஜெட் அதாவது நிதி நிலை அறிக்கை (வரவு-செலவு திட்டம்) தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகியுள்ளார். அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனை கருதி தனியாக விவசாய பட்ஜெட்டை எடியூரப்பா தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்பு, கர்நாடக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான தீர்மானத்தை கொண்டுவர ஆளும் பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானம் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளதாக ெதரிகிறது. இதற்கிடையே அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதையொட்டி அரசியல் சாசனம் குறித்து 2 நாட்கள் விவாதம் நடத்த சபாநாயகர் முடிவு செய்துள்ளார். நாளையும் (செவ்வாக் கிழமை), நாளை மறுநாளும் (புதன்கிழமை) இந்த விவாதம் நடக்கவுள்ளது. இந்த விவாதத்திற்கு பிறகு அதாவது 4-ந் தேதி மாலை குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன. அதனால் சட்டசபையில் பா.ஜனதா கொண்டு வரும் குடியுரிமை திருத்த சட்ட தீர்மானத்தை எதிர்த்து அக்கட்சிகள் போராட்டம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டசபையில் பரபரப்பான காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளது.

Next Story