பெண் தூக்குப்போட்டு தற்கொலை: மருத்துவமனை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம் - திருப்பத்தூரில் பரபரப்பு


பெண் தூக்குப்போட்டு தற்கொலை: மருத்துவமனை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம் - திருப்பத்தூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2020 4:15 AM IST (Updated: 2 March 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் கடிதம் தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் அன்பு (வயது 53). தி.மு.க. நகர துணைச் செயலாளராக உள்ளார். இவருடைய மகள் பொன்மணி (28). இவருக்கும் நாட்டறம்பள்ளி தாலுகா புள்ளனேரி கிராமத்தில் உள்ள இந்திய ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக உள்ள பூபதி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று காலை பொன்மணி திருப்பத்தூர் அண்ணாநகரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார். உள்ளே அறைக்கு சென்ற அவர் 8 மணி அளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பகல் 1 மணி அளவில் அரசு மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் பொன்மணியின் உடலை பிரேத பரிசோதனை செய்து தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த டாக்டர் செந்தில்குமார் காவல்துறையில் இருந்து பிரேத பரிசோதனை செய்ய கடிதம் தரவில்லை என கூறியுள்ளார்.

உடனடியாக தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் போலீஸ் நிலையத்துக்கு செல்போனில் பேசியபோது இன்ஸ்பெக்டர் இல்லை வெளியே சென்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாரை கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

முன்னதாக பொதுமக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது மாடு முட்டியதாக கூறி ஆட்டோவில் வாலிபரை எடுத்துக் கொண்டு வந்தனர். அவர்களை உள்ளே செல்லக் கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்டோவை பின்பக்கம் எடுத்துச் சென்றனர். இதையடுத்து மருத்துவமனை மெயின் கேட் கதவை போலீசார் இழுத்து மூடினார்கள்.

Next Story