பரங்கிப்பேட்டையில், ரூ.5 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்


பரங்கிப்பேட்டையில், ரூ.5 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 March 2020 3:30 AM IST (Updated: 2 March 2020 6:14 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டையில் 3 இடங்களில் மொத்தம் ரூ.5 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புவனகிரி,

கடலூர் மாவட்டத்தில் பாய்ந்து ஓடும் ஆறுகளில் முக்கிய ஆறாக விளங்கும் வெள்ளாறு சேத்தியாத்தோப்பு அணைக்கட்டை கடந்து பரங்கிப்பேட்டை பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக மாறி வருகிறது. இதனால் அந்த நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் உப்பு நீரால் அப்பகுதியில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கடல் நீர் வெள்ளாற்றில் உட்புகுவதை தடுக்கவும், மழைநீரை அதிக அளவில் தேக்கி வைக்கவும் பரங்கிப்பேட்டை பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியோடு பரங்கிப்பேட்டை பகுதியில் வெள்ளாற்றில் 3 இடங்களில் மொத்தம் ரூ.5 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்தது. அதன்படி நிதிஒதுக்கப்பட்டு தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உப்பாக மாறியது. இதனால் நாங்கள் நல்ல தண்ணீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு காலி குடங்களுடன் அலைந்து திரிந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம். மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வந்தது. இந்த நிலையில் பரங்கிப்பேட்டை பகுதியில் தற்போது தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இருப்பினும் பணியை தரத்துடன் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Next Story