பொதுத்தேர்வை மாணவ- மாணவிகள் தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும் - கலெக்டர் அறிவுரை
பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுரை கூறியுள்ளார்.
வேலூர்,
தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாணவ- மாணவிகள் எந்தவிதமான பதற்றமும் இன்றி, தன்னம்பிக்கையோடு தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்கும் விடுமுறை இருப்பதால் அந்த நாட்களில் பாடங்களில் தெளிவாக திருப்புதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தேர்வு நாட்களில் தேர்வு மையத்துக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.
பாட ஆசிரியர்கள் தெரிவித்துள்ள அனைத்து நுணுக்கங்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து தேர்வுக்கும் வினாத்தாள் வாசிப்பதற்கு 10 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கவனமாகவும், நிதானத்துடனும் வினாத்தாள்களை படித்து புரிந்து கொண்டு தெளிவாக பதில் தெரிந்த வினாக்களை முதலாவதாக எழுத வேண்டும். அதன்பிறகு சிந்தித்து எழுதக்கூடிய வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும். கவனத்தை சிதற விடக்கூடாது.
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். தேர்வு காலத்தில் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண்களை எடுத்து வெற்றி பெற்று அனைவரும் உயர்கல்வி தொடர வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story