பல தலைமுறைகளாக களிமண்ணால் சாமி சிலைகள் செய்து வரும் செரியலூர் மண்பாண்ட கலைஞர்கள்
பல தலைமுறைகளாக களி மண்ணால் சாமி சிலைகளை செரியலூர் மண்பாண்ட கலைஞர்கள் செய்து வருகின்றனர்.
கிராம கோவில்கள்
தமிழ்நாட்டில் உள்ள கிராம கோவில்கள் இன்னும் வனங்களிலும் கிராம எல்லைகளிலும் உள்ளது. பெரும்பாலும் கிராம காவல் தெய்வங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் தான் என்பது கிராம மக்களின் வலுவான நம்பிக்கை. அதாவது இந்த மண்ணில் வாழ்ந்தவர்களை தான் தற்போது கிராம காவல் தெய்வங்களாக நினைத்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. அதனால் தான் பல்வேறு பகுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் வழிபாடுகள் நடத்துவதற்காக சாமி சிலைகள், பரிவார தெய்வங்கள், யானை, காளை, குதிரை, நாய் போன்ற சிலைகளை களிமண்ணில் செய்து வைத்து வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
இதற்காக கிராம காவல் தெய்வங்களின் வடிவில் களிமண் சிலைகள் செய்யப்படுகிறது. கீரமங்கலம் அருகில் செரியலூர் கிராமத்தில் உள்ள மண்பாண்டக் கலைஞர்கள் பல தலைமுறைகளாக களிமண் சிலைகள் செய்து வருகின்றனர். மேற் பனைக்காடு, வடகாடு உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள கிராம காவல் தெய்வ வழிபாடுகளுக்கு செரியலூரில் இருந்தே களிமண் சிலைகளை செய்து எடுத்துச் செல்கின்றனர்.
களிமண் சிலைகள் செய்யும் பணி
தற்போது மேற்பனைக்காடு வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள கிராம காவல் தெய்வமான அய்யனார் கோவிலுக்கு சாமி சிலைகள், பரிவார தெய்வங்கள், குதிரை, காளை, நாய் உள்ளிட்ட சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
இதுகுறித்து செரியலூரில் களிமண் சிலைகள் செய்யும் தொழிலாளி தங்கராசு கூறுகையில், பல கிராமங்களுக்கு செரியலூரில் இருந்து தான் களிமண் சிலைகள் செய்வோம். பல தலைமுறைகளாக சிலைகள் செய்து கொடுக்கிறோம். சிலைகள் செய்ய முன்பணம் வாங்கிவிட்டால் விரதம் இருந்து தான் சிலைகள் செய்ய வேண்டும். முன்பு செரியலூரிலேயே களிமண் கிடைத்தது. ஆனால் இப்போது களிமண் கிடைக்கவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து லாரிகளில் களிமண் வாங்கி வந்து மண்பாண்டங்கள் செய்து வருகிறோம். தற்போதும் கூட சிலைகள் செய்ய வெளியூரில் இருந்தே களிமண் வாங்கி வந்து செய்கிறோம். இதனால் பெரிய லாபம் கிடைப்பதில்லை. வேலைக்கான கூலி மட்டும் கிடைக்கிறது. இருந்தாலும் பல கிராமங்களுக்கும் தொ டர்ந்து சிலைகள் செய்து கொடுத்ததால் தொடர்ந்து வருமானத்தைப் பார்க்காமல் இப்பணியை செய்து வருகிறோம் என்றார்.
Related Tags :
Next Story