திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: சுவாமி தங்கமுத்துகிடா வாகனத்திலும் அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதிஉலா


சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதிஉலா
x
சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதிஉலா
தினத்தந்தி 2 March 2020 12:56 PM IST (Updated: 2 March 2020 12:56 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 3-ம் திருநாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

மாசித் திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 28-ந் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றார். 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

தங்கமுத்துகிடா வாகனம்
காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கோவில் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைந்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுத்தனர்.

இன்று வெள்ளி யானை- சரப வாகனம்
மாசித் திருவிழாவின் 4-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story