நகராட்சி, பேரூராட்சிகளில் 396 வாக்குச்சாவடிகள் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்


நகராட்சி, பேரூராட்சிகளில் 396 வாக்குச்சாவடிகள் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்
x
தினத்தந்தி 3 March 2020 3:45 AM IST (Updated: 2 March 2020 10:49 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் 396 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள நகராட்சி, பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசும்போது கூறிய தாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அட்டவணையின்படி வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த 26-ந் தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்குச்சாவடிகள் பட்டியல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியிடப்படும். நகராட்சி தேர்தலை பொருத்தவரை, ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,300-ஆக இருக்குமாறு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அதிகபட்சமாக 1,400 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஊட்டி நகராட்சியில் 76 வாக்குச்சாவடிகள், குன்னூர் நகராட்சியில் 39, கூடலூர் நகராட்சியில் 43, நெல்லியாளம் நகராட்சியில் 39 என மொத்தம் 197 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 4 நகராட்சிகளில் 108 வார்டுகள் உள்ளன. தேவர்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ்குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், அதிகரட்டி, பிக்கட்டி, ஓவேலி, சோலூர் ஆகிய 11 பேருராட்சிகளில் உள்ள 186 வார்டுகளில் 199 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் என மொத்தம் 396 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தலுக்காக தெரிவு செய்யப்பட்டு உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்கப்பட்டு உள்ளதால், அந்த பள்ளிகள் இயங்கும் நிலையில் உள்ளதா? என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் வகையில் தற்போது தொடர்புபடுத்தும் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற 19-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story