கூடலூர் அருகே, வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்
கூடலூர் அருகே வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சியில் காட்டு யானைகள் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அவை முதுமலை வனத்தில் இருந்து வெளியேறி இரவில் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குன்டித்தாள் கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அப்போது சிலர் தங்களது வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் குடும்பத்தினர் காட்டு யானைக்கு பயந்து அருகே உள்ள மற்றொருவர் வீட்டுக்கு சென்றனர்.
இந்த சமயத்தில் காட்டு யானை நாராயணனின் வீட்டு சுவரை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை உடைத்தது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஆதிவாசி சந்திரன் வீட்டை சேதப்படுத்தியது. தொடர்ந்து அங்குள்ள விவசாய தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்தது. அப்போது பாகற்காய் பந்தல்களை சாய்த்து, அட்டகாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
காட்டு யானை ஊருக்குள் முகாமிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும், விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துவதால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள், பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
காட்டு யானைகளால் சேதம் அடையும் பொருட்களுக்கு வனத்துறையினர் இழப்பீடு தொகை தருவதாக உறுதி அளிக்கின்றனர். ஆனால் முறையாக விண்ணப்பித்தால் போதிய இழப்பீடு தருவது இல்லை. அவ்வாறு காலதாமதமாக தந்தாலும் சேதத்துக்கு ஏற்ப தொகை தருவது இல்லை. எனவே வீடுகள், பாகற்காய் பயிருக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க முன்வர வேண்டும். மேலும் காட்டு யானைகள் வருவதை தடுக்க இரவு ரோந்து பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோன்று பந்தலூர் தாலுகா சேரம்பாடி பஜார் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 5 காட்டு யானைகள் முகாமிட்டன. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பின்னர் விடியற்காலையில் கண்ணம்பள்ளி செல்லும் சாலையோரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கம்பிகளை உடைத்து சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வன காப்பாளர் ராபர்ட் வில்சன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.
Related Tags :
Next Story