போலி ஆதார் கார்டுடன் மதுரையில் தங்கிய உஸ்பெகிஸ்தான் பெண் கைது - உடந்தையாக இருந்த 2 பேர் குறித்தும் விசாரணை
போலி ஆதார் கார்டுடன் மதுரையில் தங்கி இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டு இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை,
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் திடீர்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அந்த விடுதியில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயர் நைமோவா ஜெரினா (வயது 22) என்றும், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், நைமோவா ஜெரினா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் அவரது விசா காலம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் அவர் மீண்டும் அவரது சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லாமல் இந்தியாவிலேயே தங்கி பல்வேறு ஊர்களுக்கு சென்று வந்துள்ளார். அவர் போலி ஆதார் அட்டையை தயாரித்து அதன் உதவியுடன் இந்தியாவிலேயே சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.
எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து நைமோவா ஜெரினாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசா காலம் முடிந்ததும் சட்டவிரோதமாக அந்தப் பெண் மதுரையில் தங்கியதற்கான காரணம் என்ன? உளவு பார்க்க வந்தாரா? என்பது குறித்தும் மதுரை மாநகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுசம்பந்தமாக அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story