சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்


சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2020 4:15 AM IST (Updated: 3 March 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே சுடுகாட்டு பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி சுடுகாட்டுக்கு எதிரே சாலையில் பிணத்தை வைத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தில் உள்ள இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டிற்கு சென்று வர 12 அடி அகலத்தில் ஏற்கனவே பாதை இருந்தது. அந்த சுடுகாட்டு பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. எனவே சுடுகாட்டு பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை மீட்டு தரும்படி கடந்த 1 வருடத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் வசித்து வந்த கூலித்தொழிலாளி ஒருவர் இறந்து போனதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்கு பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தரக்கோரி கிராம மக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் (பொறுப்பு) பெருமாள், தாசில்தார் செந்தாமரைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.சுடுகாட்டுக்கு செல்லும் வழி தொடர்பாக நீதிமன்ற தடை உத்தரவை தனிநபர் பெற்று இருப்பதால் மாற்று இடத்தை அரசு தரப்பில் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவியதால் நேற்று முன்தினம் இரவு முதல் அங்கு பாதுகாப்பிற்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் இறந்தவரின் உடலை கிராம மக்கள் பாடை கட்டி சுடுகாடு நோக்கி தூக்கிச்சென்றனர். அப்போது சுடுகாட்டுக்கு எதிரே தனியார் ஆக்கிரமிப்பு சுவர் அருகே சாலையில் பாடையுடன் பிணத்தை வைத்து பொதுமக்கள் கோஷம் போட்டவாறு திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றியும் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், சுடுகாட்டு பாதையையொட்டிய பட்டா நிலத்தில் தற்காலிகமாக உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு அந்த வழியாக இறந்தவரின் உடலை எடுத்து சென்று சுடுகாட்டிற்கு முன்னதாக குறிப்பிட்ட இடத்தில் உடலை அடக்கம் செய்தனர்.

Next Story