பிளஸ்-2 தேர்வு தொடங்கியது - மொழிப்பாடம் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து


பிளஸ்-2 தேர்வு தொடங்கியது - மொழிப்பாடம் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
x
தினத்தந்தி 3 March 2020 5:00 AM IST (Updated: 3 March 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொழிப்பாட தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நெல்லை,

நடப்பு கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ், இந்தி, பிரெஞ்சு, அரபி உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக காலை 9 மணி முதலே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு ஆர்வத்தோடு வரத்தொடங்கினர். அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் பாடங்களை மீண்டும் ஒருமுறை படித்ததை காண முடிந்தது.

தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பு, தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர். சில பெற்றோர் முத்தமிட்டு மாணவ-மாணவிகளை அனுப்பி வைத்தார்கள். இதேபோல மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை நல்ல முறையில் எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தது. மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்ப்பதற்கும் வழங்கப்பட்டன. தேர்வு மையங்களில் குடிநீர், மின்விசிறி, வெளிச்சம் நிறைந்த சூழல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு முதன் முறையாக தேர்வு நடந்தது. பறக்கும் படையினரும் ரோந்து சுற்றி வந்து தேர்வு எழுதிய மாணவர்களை கண்காணித்தனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். முதன்மை கல்வி அலுவலர் பூபதி தலைமையிலான குழுவினர் தேர்வு அறைக்கு சென்று கண்காணித்தனர். தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடந்தது. ‘தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடவேண்டாம்’ என அரசு தேர்வுகள் இயக்ககம், பள்ளி கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வேண்டுகோள் விடுத்து நோட்டீசுகளும் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டிருந்தன. தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 மாணவிகள், 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 மாணவர்கள், 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள், 62 சிறை கைதிகள் மற்றும் 2 திருநங்கைகள் அடங்குவார்கள். தலைநகர் சென்னையில் மட்டும் 160 மையங்களில் 47 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு கூடுதலாக 68 புதிய மையங்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர் என 3 கல்வி மாவட்டங்களும், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் என 2 கல்வி மாவட்டங்களும் உள்ளன. இந்த 5 கல்வி மாவட்டங்களிலும் 16 ஆயிரத்து 113 மாணவர்களும், 20 ஆயிரத்து 427 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 540 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்கள். 135 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்வு எழுதினார்கள்.

பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கான விடைத்தாளின் முகப்புத்தாள் இளம் சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது.

நெல்லை கல்வி மாவட்டத்தில் 118 மாற்றுத்திறனாளிகளும், சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 18 பேரும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 9 பேரும் தேர்வு எழுதினர். அவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், சேவியர் மேல்நிலைப்பள்ளியிலும் அதிக மாற்றுதிறனாளிகள் தேர்வு எழுதினர்.

தென்காசி மஞ்சம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள், மொழிப்பாடங்களுக்கான தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாகவும், கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மொழிப்பாடங்களுக்கான தேர்வில் அதிகமானோர் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேபோல தமிழ் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர்.

Next Story