தினந்தோறும் பொய்களை சொல்வதே வழக்கம் நாராயணசாமிக்கு, கிரண்பெடி பதிலடி


தினந்தோறும் பொய்களை சொல்வதே வழக்கம் நாராயணசாமிக்கு, கிரண்பெடி பதிலடி
x
தினத்தந்தி 3 March 2020 12:29 AM GMT (Updated: 3 March 2020 12:29 AM GMT)

தினந்தோறும் பொய்களை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்று முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதிலடி கொடுத்துள்ளார்.

புதுச்சேரி,

மத்திய கப்பல் போக்கு வரத்துத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த 27-ந்தேதி புதுவை வந்தார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, இலங்கை-காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் கவர்னர் கிரண்பெடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரது செயல்பாடு காரணமாக மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.

கிரண்பெடி பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காரைக்காலில் இருந்து கப்பல் போக்குவரத்து தொடங்க பயணிகளிடம் குடியேற்ற சோதனை நடத்தப்பட வேண்டும், உளவுப்பிரிவு, கடத்தல் தடுப்பு பிரிவு, போக்குவரத்து ஆகியவற்றையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்த வேண்டும். இதற்காக தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆனால் இங்கு சிலர் நாள்தோறும் பொய்களை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Next Story