குளச்சலில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்: ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினரை போலீசார் அழைத்து சென்றதால் பரபரப்பு
குளச்சல் நகரசபை முன் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் போராட்டம்
குளச்சல் நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். எனவே சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வேலைக்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள் சம்பள பாக்கியை வழங்கினால் மட்டுமே வேலைக்கு செல்வோம் என்று கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா...
நகரசபை முன்பு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தகவலை அறிந்து குமரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் மணிமாறன் தலைமையில் நிர்வாகிகள் 5 பேர் அங்கு வந்த னர். பின்னர், அவர்கள் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் துப்புரவு தொழிலாளிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை அழைத்து விசாரித்தனர். பின்னர், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தொழிலாளர்கள், தங்களுக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சியினரை விடுவிக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
பின்னர், அவர்கள் அனைவரும் நகரசபை அலுவலகத்தில் இருந்து குளச்சல் போலீஸ் நிலையம் சென்று நாம் தமிழர் கட்சியினரை விடுவிக்க கோரி முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து நகரசபை அதிகாரிகள் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் நாம் தமிழர் கட்சியினரையும் போலீசார் விடுவித்தனர்.
Related Tags :
Next Story