மது அருந்த வேண்டாம் என அறிவுரை கூறிய மனைவிக்கு அடி,உதை; நெசவு தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு


மது அருந்த வேண்டாம் என அறிவுரை கூறிய மனைவிக்கு அடி,உதை; நெசவு தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 March 2020 12:15 PM IST (Updated: 3 March 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே குடும்பம் நடத்த வருமாறு அழைக்க சென்ற போது, மது அருந்த வேண்டாம் என அறிவுரை கூறிய மனைவியை அடித்து உதைத்த நெசவு தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நெசவு தொழிலாளி
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35), நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி புவனேஸ்வரி.

குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் கடந்த 5 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத புவனேஸ்வரி, பாப்பம்பாடியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைக்க குமார் பாப்பம்பாடிக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அடி,உதை
அப்போது இனிமேல் மது அருந்தாமல், வேலைக்கு ஒழுங்காக செல்வதாக இருந்தால் நான் குடும்பம் நடத்த வருகிறேன், சேர்ந்து வாழலாம் என்று மனைவி கூறியுள்ளார். மனைவியின் இந்த பேச்சு குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எனக்கே நீ அறிவுரை கூறுகிறாயா? உன் புத்திமதி தேவை இல்லை என்று கூறி மனைவியுடன் குமார் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர் மனைவியை அடித்து உதைத்து தாக்கினார்.

இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குமாரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story