மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு : போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து; ரவுடி கைது


சிட்டிபாபு
x
சிட்டிபாபு
தினத்தந்தி 3 March 2020 2:11 PM IST (Updated: 3 March 2020 2:11 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேரை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குண்டர் தடுப்பு சட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் சிட்டி பாபு என்ற சையது இப்ராஹிம் (வயது30). இவர், தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். சிட்டி பாபு மீது போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளதால் ரவுடிகள் பட்டியலில் போலீசார் வைத்து உள்ளனர்.

இதனால் அவர், கடந்த 2010-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் பழைய வழக்கு சம்பந்தமாக சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. எனவே மேட்டுப்பாளையம் போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர்.

துரத்தி சென்றனர்
இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரில் சிட்டிபாபு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், திலக் மற்றும் ஏட்டு பிரபாகரன் ஆகியோர் நள்ளிரவு 1 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு போலீசாரை கண்டதும் சிட்டிபாபு தப்பி ஓடினார். உடனே போலீசார் சிட்டிபாபுவை துரத்தி சென்று மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது சிட்டிபாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஆனாலும் போலீசார் அவரை பிடிக்க நெருங்கி சென்றனர்.

கத்திக்குத்து
இதனால் ஆத்திரம் அடைந்த சிட்டிபாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், திலக் மற்றும் ஏட்டு பிரபாகரன் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதில், படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், திலக், ஏட்டு பிரபாகரன் ஆகியோர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேடுதல் வேட்டை
2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆகியோரை ரவுடி கத்தியால் குத்திய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலைமுயற்சி என 2 பிரிவுகளில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி அறிவுரையின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

சிறையில் அடைப்பு
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் சாமண்ணா வாட்டர் ஹவுஸ் அருகே காட்டுப்பகுதியில் சிட்டிபாபு பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிட்டிபாபுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை மேட்டுப்பாளையம் போலீசார் கோவை மாஜிஸ்தி ரேட் கோர்ட்டு நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ராமதாஸ், சிட்டிபாபுவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் இதையடுத்து சிட்டிபாபு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story