தாளவாடி அருகே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க மேலும் ஒரு கூண்டு


தாளவாடி அருகே அட்டகாசம் செய்து வரும்   சிறுத்தையை பிடிக்க மேலும் ஒரு கூண்டு
x
தினத்தந்தி 4 March 2020 4:15 AM IST (Updated: 3 March 2020 9:20 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது.

தாளவாடி, 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மலைகிராமங்கள் சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ் நகர். கடந்த 4 மாதங்களாக இந்த மலைக்கிராமங்களுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகள், 15-க்கும் மேற்பட்ட நாய்களை சிறுத்தை கடித்து கொன்று அட்டகாசம் செய்தததுடன், அந்த பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்று பதுங்கி வந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

எனவே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பீம்ராஜ் நகர் கல்குவாரி பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. பின்னர் அந்த கூண்டு சூசைபுரத்தில் உள்ள கல்குவாரி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாற்றி வைக்கப்பட்டது. இடம் மாற்றி வைத்தும் அந்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை.

மேலும் ஒரு கூண்டு

இதற்கிடையே கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தையானது அங்கிருந்த நாயை துரத்தி உள்ளது. இந்த காட்சி ரமேசின் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவானது.

இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மேலும் ஒரு புதிய கூண்டை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கப்பட்ட அந்த கூண்டை ரமேஷ் தோட்டத்தில் கொண்டு வைத்தனர். அந்த கூண்டின் உள்ளே ஒரு நாயையும் வனத்துறையினர் கட்டி வைத்து உள்ளனர். அந்த கூண்டுக்குள்ளாவது சிறுத்தை சிக்குமா? என வனத்துறையினரும், பொதுமக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Next Story