ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு; விற்பனையாளர்கள் வேலை நிறுத்தம்: கேன் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி


ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு; விற்பனையாளர்கள் வேலை நிறுத்தம்: கேன் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 4 March 2020 5:30 AM IST (Updated: 3 March 2020 10:10 PM IST)
t-max-icont-min-icon

தனியார் குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு மற்றும் விற்பனையாளர்களின் வேலை நிறுத்தத்தால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சீரான குடிநீர் வினியோகத்திற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருச்சி,

தமிழகத்தில் அனுமதி பெறாமல் மற்றும் விதிகளை மீறி இயங்கும் தனியார் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையில் நிலத்தடி நீரியல் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் திருச்சி மாவட்டத்தில் 23 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. இதேபோல பெரம்பலூரில் 5 ஆலைகளுக்கும், கரூரில் 8 ஆலைகளுக்கும், புதுக்கோட்டையில் 39 குடிநீர் ஆலைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் கேன் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

மேலும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க கோரி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் சங்கத்தினர் கடந்த 27-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேன் குடிநீர் வினியோகம் முழுவதும் பாதிப்படைந்துள்ளது.

தட்டுப்பாடு

பொதுவாக வீடுகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சாலையோர டிபன் கடைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் கேன் குடிநீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேன் குடிநீரானது தேவைக்கு ஏற்ப பொதுமக்கள் வாங்கி வைத்து பயன்படுத்துவது உண்டு. ஒரு சிலர் தேவையானவற்றை விட சற்று கூடுதலாக கேன்களை வாங்கி வைத்து பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட பின்னர் கேன் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிப்படைந்தது. பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஏற்கனவே வாங்கி வைத்த கேன்களும் தீர்ந்து விட்டதால் வேறு வழியில்லாமல் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

காவிரி குடிநீர்

திருச்சியை பொறுத்தவரை மாநகராட்சி மூலம் காவிரி, கொள்ளிடம் ஆறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தினமும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை குழாய்களில் பிடித்து பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் கேன் குடிநீர் குடித்து பழகியவர்கள், குழாய் குடிநீரை விரும்புவது இல்லை. இதனால் கேன் குடிநீர் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு எப்படியாவது ஒரு கேன் குடிநீர் கொடுக்கும்படி டீலர்களிடம் மன்றாடி வருகின்றனர்.

உரிய அனுமதி பெற்ற குடிநீர் ஆலைகள் திருச்சி மாவட்டத்தில் 7 மட்டும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலைகளின் கேன் குடிநீரை விற்க தயாராக இருந்தாலும் அதனை வினியோகிக்கும் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்தத்தில் இருப்பதாலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒருசில இடங்களில் நிறுவத்தினர் மாற்று ஏற்பாடு செய்து முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் முக்கிய அலுவலகங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகளுக்கு கேன் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் பாதிப்பு

அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘திருச்சி மாநகரம் முழுவதும் ஒரு நாளைக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேன் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. மாவட்டம் முழுவதும் சேர்ந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கேன் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் காரணமாக இவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிலர் ஏற்கனவே எங்களிடம் வாங்கிய கேன் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சிலருக்கு காலியாகி விட்டது. சிலர் சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த டீலர்களிடம் கேன் குடிநீரை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

ஐகோர்ட்டு தீர்ப்பில் தான் எங்களுக்கு நல்ல காலம் இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் சிலருக்கு தினக்கூலி அடிப்படையிலும், சிலருக்கு மாத அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சம்பளம் வழங்கப்படமாட்டாது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கேன் குடிநீர் வினியோகம் நிறுத்தத்தால் டீலர்களுக்கு பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரை லிட்டர், 1 லிட்டர், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்களும் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடைகளுக்கு குடிநீர் பாட்டில் விற்பனைக்கு வரவில்லை. ஏற்கனவே இருப்பு வைத்திருந்த பாட்டில்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். குடிநீர் பாட்டில்களும் தட்டுப்பாடு ஏற்படும்’ என்றார்.

வரைமுறை

பொதுப்பணித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், ‘தனியார் குடிநீர் ஆலைகள் அமைக்க சட்டவிதிமுறைகள் உள்ளன. மேலும் நிலப்பரப்பில் எந்தெந்த இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. இதன் அடிப்படையில் தான் குடிநீர் ஆலைகள் இயங்க வேண்டும். ஆனால் உரிய அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்ற பின் சிலர் விதிகளை மீறி ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை எடுத்து குடிநீராக வினியோகித்துள்ளனர்’ என்றனர்.

தற்போது நிலவுகிற கேன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சீரான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.


Next Story