கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
கர்நாடகத்தில் இன்று பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 6.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இன்று(புதன்கிழமை) பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. கர்நாடக மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த பி.யூ. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தேர்வு இது ஆகும். இந்த தேர்வை மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரத்து 498 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதில் 90 ஆயிரத்து 922 பேர் மறுதேர்வர்கள் ஆவர். 27 ஆயிரத்து 976 பேர் தனித்தேர்வர்கள் ஆவர்.
2 லட்சத்து ஒரு ஆயிரத்து 659 மாணவ-மாணவிகள் கலை பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்கள். 2 லட்சத்து 61 ஆயிரத்து 833 மாணவ-மாணவிகள் வணிகவியல் பிரிவையும், 2 லட்சத்து 17 ஆயிரத்து 6 மாணவ-மாணவிகள் அறிவியல் பாடப்பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பி.யூ. கல்வித்துறை செய்துள்ளது. இதுதொடர்பாக பி.யூ. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பி.யூ. 2-ம் ஆண்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை எந்தவித முறைகேடும் நடந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறோம்.
முதன்மை கண்காணிப் பாளர், இணை முதன்மை கண்காணிப்பாளர்கள், மாநில அளவிலான சிறப்பு ஆய்வு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர், மாவட்டம் - தாலுகா அளவிலான பறக்கும் படையினர் என மொத்தம் 3,500 அரசு பணியாளர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடக அளவில் மொத்தம் 1,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் எந்தவித குறைபாடுகளும் இன்றி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு விட்டனர்.
தேர்வு நடைபெறும் மையங்களில் கல்வித்துறை அதிகாரிகள் கூறிய அறிவுறுத்தல்படி கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். எவற்றை எல்லாம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே தேர்வு பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பாளர்கள் நியமனங்கள் என அனைத்து விதங்களிலும் பி.யூ. கல்வித்துறை அதிகாரிகள், அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேர்வு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தலைமை வகிப்பார்கள்.
கேள்வித்தாள்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வேன்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கேள்வித்தாள்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அந்த வேன்கள் ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படும். மேலும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story