பணிச்சுமையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை - நண்பருடன் பேசிய ஆடியோ ‘வாட்ஸ்-அப்’பில் வெளியானதால் பரபரப்பு
செஞ்சி அருகே பணிச்சுமையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பருடன் அவர் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நடுநெல்லிமலை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன் (வயது 26). இவர் செஞ்சி போலீஸ் நிலையத்தில் கடந்த ஓராண்டாக 2-ம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று முன்தினம் பிளஸ்-2 பொதுத்தேர்வு பாதுகாப்பு பணிக்கு சரவணன் சென்றிருந்தார். அதன் பின்னர் இரவு 8 மணிக்கு அவர், செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு வந்து விட்டு, வீட்டுக்கு புறப்பட்டார். இந்தநிலையில் செஞ்சி போலீசார் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தும் வாட்ஸ்-அப் குழுவில் தான் இருக்கும் இடத்தை ஷேர் செய்த சரவணன், என்னுடைய கடைசி நிமிடங்கள்... என்னை மன்னிச்சுடுங்க சார்... என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதனை வாட்ஸ்- அப்பில் பார்த்து பதற்றம் அடைந்த போலீசார், அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் சரவணன் எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து சரவணனை ஏற்கனவே வாட்ஸ்- அப்பில் ஷேர் செய்திருந்த இடமான செஞ்சி அருகே உள்ள அத்தியூர் காப்புக்காட்டிற்கு போலீசார் விரைந்து சென்று தேடிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு புளியமரத்தில் சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சரவணன், தன்னுடன் பணிபுரியும் சக போலீஸ்காரர் ஒருவரிடம் செல்போனில் பேசியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
நான் மட்டும் இந்த போலீஸ் நிலையத்தில் கஷ்டப்படவில்லை. இந்த போலீஸ் நிலையத்தில் நான் உள்பட 5 பேர் மட்டுமே பணியில் இருக்கிறோம். மற்ற அனைவரும் இந்த 3 நாட்களில் விடுமுறை எடுத்து சென்று விட்டார்கள். எல்லோருக்கும் செம கஷ்டம். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணியில் இருக்கிறேன். இரவு பணிமுடித்து விட்டு பணியின் காரணமாக விழுப்புரத்துக்கு சென்றேன். பின்னர் 3 மணிக்குத்தான் வீட்டிற்கு சென்றேன். அதற்குள் போலீஸ் எழுத்தர் போன் செய்து, விழுப்புரத்துக்கு போகிறாயா... போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு வருகிறாயா... என்று கேட்கிறார். பணியில் ஆள் இல்லை. கொஞ்சம் பார்த்து செய். ஓய்வு கொடுக்கும்போது, ஓய்வு கொடுக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு பிறகுதான் பயங்கர பிரச்சினையாகி விட்டது. அதனால்தான் வாட்ஸ்-அப் குழுவில் இருந்து வெளியேறினேன். அதன்பிறகு அமல்சார் தான் மீண்டும், எனது செல்போன் நம்பரை வாட்ஸ்-அப் குழுவில் சேர்த்து விட்டார். சப்-இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தாலும் எடுக்கவில்லை.
இவ்வாறு அந்த ஆடியோவில் உள்ளது.
இந்த ஆடியோவை வைத்து பார்க்கும்போது பணிச்சுமையால் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் விமல் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story