திட்ட பணிக்கு பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை தேவை - ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்


திட்ட பணிக்கு பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை தேவை - ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 4 March 2020 3:15 AM IST (Updated: 4 March 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

திட்ட பணிக்கு பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொண்டி,

திருவாடானை யூனியன் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் அதன் தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. அச்சங்குடி ஊராட்சி தலைவர் கடம்பாகுடி கணேசன், கவுரவ தலைவர் கீழ்ப்புலி கருப்பையா, கூட்டமைப்பு செயலாளர் பரக்கத் அலி, பொருளாளர் ராமநாதன், பனஞ்சாயல் மோகன்ராஜ், மங்கலக்குடி அப்துல் ஹக்கீம், கோடனூர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அரசத்தூர் ஊராட்சி தலைவர் முருகேசுவரி சரவணன் வரவேற்றார்.

கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழங்குளம் ஊராட்சி தலைவர் கருப்பையா கவுரவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து திருவாடானை யூனியனில் ஊராட்சி தலைவர்கள் பதவி ஏற்றதற்குபின்னர் அரசின் திட்டப்பணிகள், மக்களுக்கான வளர்ச்சி பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை ஊராட்சி தலைவர்களுக்கு காசோலை வழங்கப்படவில்லை. மேலும் ஆன்லைன் பரிவர்த்தனையையும் முறைப்படுத்தவில்லை. இதனால் ஊராட்சிகளில் தொடர்ந்து பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளில் நிறைவேற்றப்படும் பணிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் திருவாடானை யூனியனில் கடந்த 2018-19-ம் ஆண்டில் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் பயிர் காப்பீடு செய்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பல்வேறு கிராமங்கள் கணக்கெடுப்பில் விடுபட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தியும் இதுநாள்வரை பயிர் இன்சூரன்சு தொகை கிடைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்்கால அடிப்படையில் பயிர் இன்சூரன்சு தொகையை அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஊராட்சிகளுக்கு வரவேண்டிய மத்திய, மாநில அரசின் நிலுவை தொகையை காலதாமதம் இல்லாமல் ஊராட்சிகளுக்கு உடனடியாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கடந்த காலம் போல் ஊராட்சி தலைவர்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் துணை செயலாளர் கூகுடி சரவணன் நன்றி கூறினார்.

Next Story