செங்கல்பட்டு கோர்ட்டில் இருந்து திரும்பிய போது வேலூர் ஜெயில் கைதி ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட்டம்
செங்கல்பட்டு கோர்ட்டில் இருந்து திரும்பிய போது வேலூர் ஜெயில் கைதி ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
வாலாஜா,
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42). இவர் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அணைக்கட்டு பகுதியில் நடந்த கொலை வழக்கில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக காஞ்சீபுரம் போலீசார் வெங்கடேசனை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணை முடிந்து பஸ்சில் நேற்று முன்தினம் இரவில் வேலூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
வாலாஜா டோல்கேட் அருகே உள்ள மேம்பாலத்தை பஸ் கடந்து செல்லும் போது திடீரென வெங்கடேசன் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து பாதுகாப்பிற்காக வந்த போலீஸ்காரர்கள் ராஜா, புஷ்பவனம் ஆகியோர் இதுகுறித்து வாலாஜா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய கைதி வெங்கடேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story