மங்கலம் அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.4½ கோடி பொருட்கள் எரிந்து நாசம்


மங்கலம் அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.4½ கோடி பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 March 2020 10:15 PM GMT (Updated: 3 March 2020 7:09 PM GMT)

மங்கலம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.4½ கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

மங்கலம், 

திருப்பூர் அருகே உள்ள எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 52) மற்றும் ராக்கியாபாளையத்தை சேர்ந்த வள்ளியம்மாள் (52) ஆகியோர் பங்குதாரர்களாக சேர்ந்து மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் நூற்பாலை வைத்துள்ளனர். நூற்பாலை கட்டிடம் திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த செந்தில் வடிவு (45) என்பவருக்கு சொந்தமானது ஆகும்.

பருத்தி பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் நூற்பாலையில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை நூற்பாலையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். காலை 8.10 மணிக்கு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் எந்திரத்தில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்ததும் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் இதுகுறித்து நூற்பாலை மேலாளர் பழனிசாமிக்கும், நூற்பாலை உரிமையாளர்களுக்கும் தகவல் கூறப்பட்டது. உடனடியாக பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம் தீயணைப்பு நிலைய அதிகாரி(பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவியதால் அவினாசி தீயணைப்பு நிலையத்துக்கும், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவினாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியம், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி காங்கேய பூபதி, உதவி அதிகாரி வெங்கட்ரமணன் தலைமையில் 28 தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. இந்த தீயால் நூற்பாலையின் மேற்கூரை கீழே சரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி நூற்பாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் நூற்பாலையின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் முற்றிலும் உடைந்து கீழே விழுந்து விட்டது.மேலும் உட்புறம் இருந்த எந்திரங்கள், நூல்கள் முற்றிலும் எரிந்தன. எந்திரங்கள் தீயில் கருகி எலும்புக்கூடு போல காட்சியளித்தன. இந்த பயங்கர தீ விபத்தில் ரூ.4½ கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக நூற்பாலை தரப்பினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story