உடுமலை மூதாட்டி கொலையில் பெயிண்டர் கைது திட்டியதால் தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம்
உடுமலையில் மூதாட்டி கொலையில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார். திட்டியதால் தீர்த்துக்கட்டியதாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
போடிப்பட்டி,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்தவர் ஜோதி லட்சுமி(வயது 70). இவர் தன்னுடைய மகன் மணிகண்டன், மருமகள் கலைவாணி மற்றும் 2 பேரன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் வீட்டின் வெளியில் தூங்கிக்கொண்டிருந்த ஜோதி லட்சுமியின் தலையில் கல்லைப்போட்டு மர்ம ஆசாமி கொலை செய்தார். மேலும் சத்தம் கேட்டு வெளியே வந்த அவருடைய மருமகள் கலைவாணியின் தலையிலும் கல்லால் தாக்கினார்.
மேலும் அந்த ஆசாமி மற்றொரு வீட்டின் முன்பு படுத்துத் தூங்கிய ஜெயலட்சுமி என்பவரையும் கல்லால் தாக்கினார். இதில் காயம் அடைந்த பெண்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட மூதாட்டி ஜோதிலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
உடுமலையில் கல்லால் தாக்கி மூதாட்டியைக் கொலை செய்ததோடு, மேலும் 2 பெண்களை படுகாயப்படுத்திய ஆசாமியின் வெறிச்செயலால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அடுத்து என்னென்ன விதமான பாதிப்புகள் ஏற்படுமோ? என்று பொதுமக்களிடையே ஒரு வித அச்சம் நிலவியது.
இதனையடுத்து உடுமலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சைக்கோ ஆசாமியை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை உடுமலை-தாராபுரம் சாலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து சென்ற ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசாமி முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் உடுமலை ஏரிப்பாளையம் விஜய நகரை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரது மகன் பெயிண்டரான ஆரோக்கியராஜ்( 27 )என்பதும் தெரியவந்தது. அவர்தான் ஜோதிலட்சுமியின் தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு கொலை செய்ததும் மற்ற 2 பெண்களையும் கல்லால் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கியராஜை போலீசார் கைது செய்தனர். கைதான ஆரோக்கியராஜ் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தேன். எனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து உதைப்பேன்.
யாருடனாவது சிறிய தகராறு ஏற்பட்டாலும், அதை மனதில் வைத்துக்கொண்டு குடிபோதையில் அவரிடம் சென்று சண்டையிடுவேன். ஜெயலட்சுமியின் வீட்டுக்கு அருகில் பெயிண்டிங் வேலை செய்தபோது, அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அதேபோல மூதாட்டி ஜோதிலட்சுமியும் முன்பு ஒருநாள் என்னை திட்டினார். இவற்றை மனதில் வைத்துக்கொண்டு 2 பேரையும் கல்லால் தாக்க சென்றேன். அதன்படி வீ்ட்டிற்கு வெளியே படுத்து இருந்த ஜெயலட்சுமியின் தலையில் முதலில் கல்லை தூக்கிப்போட்டேன். பின்னர் அங்கிருந்து மூதாட்டி ஜோதிலட்சுமியை தாக்க சென்றேன். அங்கு வீட்டிற்கு வெளியே ஜோதிலட்சுமி படுத்து இருந்தார். அவரின் தலையில் ஹாலோ பிளாக் கல்லை தூக்கிப்போட்டேன். அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடிவந்த கலைவாணியையும் கல்லால் தாக்கினேன். இதில் ஜோதிலட்சுமி சம்பவ இடத்தில் இறந்து விட்டது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.
இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆரோக்கியராஜ் உடுமலை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story