வேலூர் கோட்டை, அகழிக்குள் பாய்ந்த டிராக்டரால் பரபரப்பு - மேற்பார்வையாளர் காயத்துடன் உயிர்தப்பினார்


வேலூர் கோட்டை, அகழிக்குள் பாய்ந்த டிராக்டரால் பரபரப்பு - மேற்பார்வையாளர் காயத்துடன் உயிர்தப்பினார்
x
தினத்தந்தி 4 March 2020 4:00 AM IST (Updated: 4 March 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை அகழிக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டரை ஓட்டிய மேற்பார்வையாளர் காயத்துடன் உயிர்தப்பினார்.

வேலூர்,

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோட்டை அகழியை தூர்வாரி, கோட்டையை அழகுப்படுத்தும் பணிநடைபெற்று வருகிறது.

கோட்டைக்கு பின்பகுதியில் காலியாக இருக்கும் பகுதியில் புல்தரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தினமும் டிராக்டர் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.இதற்கு மேற்பார்வையாளராக சரத்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று புல்தரை அமைக்கும் பகுதியில் அகழி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை, மேற்பார்வையாளர் சரத்குமார் அங்கிருந்து நகர்த்தி உள்ளார்.

அப்போது அவருடைய கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் திடீரென கோட்டை அகழிக்குள் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரத்குமார் உயிர் தப்பிப்பதற்காக டிராக்டரில் இருந்து குதித்துள்ளார்.

இதில் கீழே விழுந்த அவர் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

டிராக்டர் அகழிக்குள் பாய்ந்ததை அந்தப்பகுதியில் கேபிள் வயர் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று சரத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு அகழிக்குள் விழுந்துகிடந்த டிராக்டர் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story