3 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து 17,472 டன் நெல் கொள்முதல் - நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தகவல்


3 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து 17,472 டன் நெல் கொள்முதல் - நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 4 March 2020 3:30 AM IST (Updated: 4 March 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 17,472 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலசபாக்கம்,

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் பூதமங்கலம் கிராம ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கோபிநாத் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

விழாவில் திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளின் நலன் கருதி கடந்த ஆண்டு காரிப் பருவத்தில் 2018-19-ம் ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயிகளிடமிருந்து 14 ஆயிரத்து 270 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மூலம் 2ஆயிரத்து 623 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

நடப்பு ஆண்டு காரிப் பருவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தாலுகாவில் 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், போளூர் தாலுகாவில் 6, கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் 2, ஆரணி தாலுகாவில் 2, சேத்துப்பட்டு தாலுகாவில் 3, வந்தவாசி தாலுகாவில் 2,வெம்பாக்கம் தாலுகாவில் 2, செய்யாறு தாலுகாவில் 4, செங்கம் தாலுகாவில் 4, கலசபாக்கம் தாலுகாவில் 1 என 29 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கூட்டுறவுத் துறையின் மூலம் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு திறக்கப்பட்ட மொத்தம் 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,905 என்ற விலையிலும், மோட்டா ரகம் ரூ.1,865 என்ற விலையிலும் இதுவரை சுமார் 17 ஆயிரத்து 472 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரத்து 210 விவசாயிகள் நேரடியாக பயன் அடைந்துள்ளனர்.

மேலும் தற்போது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் பூதங்கமலம் கிராம ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 1000 மூட்டைகள் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story