குடிநீர் குழாய் உடைப்பு: பொதுமக்கள் திடீர் போராட்டம்


குடிநீர் குழாய் உடைப்பு: பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2020 3:30 AM IST (Updated: 4 March 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அங்கு இரும்பு குழாயை பதிக்கக்கோரி பொது மக்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.

திருவட்டார், 

திருவட்டார் அருகே பூவன்கோடு சந்திப்பு பகுதியில் இருந்து குமரன்குடி செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன் பூவன்கோடு சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது.

இதனால் பல இடங்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்தநிலையில் இரவு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இரும்பு குழாய்க்கு பதிலாக உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பிளாஸ்டிக் குழாயை பொருத்த முயன்றனர்.

இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடம் என்பதால் பிளாஸ்டிக் குழாய் பொருத்தினால் மீண்டும் உடைப்பு ஏற்படும் எனவே இரும்பு குழாய் பதிக்க வேண்டும் என்று கூறி, பணியை நிறுத்தி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதானல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் யூனியன் தலைவர் ஜெகநாதன் விரைந்து வந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகள் இரும்பு குழாய் பதிப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story