நகை இல்லாத ஆத்திரத்தில் அம்மன் சிலையை சேதப்படுத்திய கொள்ளையர்கள்


நகை இல்லாத ஆத்திரத்தில் அம்மன் சிலையை சேதப்படுத்திய கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 4 March 2020 3:30 AM IST (Updated: 4 March 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

அகஸ்தீஸ்வரத்தில் வாட்ஸ்அப்பில் வந்த தகவலை நம்பி ஏமாந்த கொள்ளையர்கள் நகை இல்லாத ஆத்திரத்தில் அம்மன் சிலையை சேதப்படுத்தினர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தென்தாமரைகுளம், 

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை இரு வேளையும் பூஜைகள் நடைபெறும். நேற்று முன்தினம் இரவு பூசாரி பாபு பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். கோவிலை திறந்து உள்ளே சென்ற அவர் அதிர்ச்சி அடைந்தார். அதாவது அம்மன் சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

இதுபற்றி கோவில் அறங்காவலர் கருணாகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்தார். தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கோவில் கருவறையில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:-

முத்தாரம்மன் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான தங்க வைர நகைகள் உள்ளன. இவை அனைத்தும் அங்குள்ள ஒரு வங்கியின் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் தங்க நெக்லஸ் ஒன்றை கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தார். அந்த நெக்லஸ் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. இந்த தகவல் வாட்ஸ்-அப் மூலம் வெளியானது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள், பக்தர் கொடுத்த நெக்லஸ் கோவிலில் அம்மன் கழுத்தில்தான் இருக்கும் என்று நினைத்து காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்தனர்.

அங்கு கருவறையில் உள்ள ஜன்னல் கம்புகளை உடைத்து, அதன் வழியாக உள்ளே கருவறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. உடனே அங்கு கிடந்த கம்பு ஒன்றை எடுத்து அம்மன் கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுக்க முயன்றுள்ளனர். அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ெகாள்ளையர்கள் அந்த கம்பால் அம்மன் முகத்தை சேதப்படுத்தி உள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு செல்போன் ஒன்று கிடந்தது. அதிகாலையில் கோலம் போட வந்த பெண் அந்த செல்போனை எடுத்து போலீசில் ஒப்படைத்தார். அந்த செல்போன் கொள்ளையர்கள் விட்டு சென்றதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கிடையே அம்மனுக்கு பக்தர் ஒருவர் அணிவித்த தங்க நெக்லஸ் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. அதனை அறியாத கொள்ளையர்கள், அம்மன் கழுத்தில் தங்க நெக்லஸ் உள்ளது என்ற வாட்ஸ்-அப் தகவலை நம்பி ஏமாந்து ஆத்திரத்தில் அம்மன் சிலையை சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story