தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தற்போது மதுரை- நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியும், திண்டுக்கல்-மதுரை இடையே தண்டவாளத்தில் பராமரிப்பு பணியும் நடக்கிறது. இதனால் திண்டுக்கல் வழியாக செல்லும் ஒருசில ரெயில்கள் பகுதியாகவும் மற்றும் முழுமையாகவும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ரெயில்கள் செல்லும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு செல்லும் பயணிகள் ரெயில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் பாலக்காட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்செந்தூர் வரை செல்லும் ரெயில் 11,15-ந்தேதிகளில் மதுரை-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் 12,13,14 ஆகிய தேதிகளில் இந்த ரெயில் கோவில்பட்டி-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்-கோவை பயணிகள் ரெயில் திண்டுக்கல்- திருப்பரங்குன்றம் இடையே இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் வியாழக்கிழமை மட்டும் வழக்கம்போல் இயங்கும். அதே போல் திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை கோவில்பட்டி-திருவனந்தபுரம் இடையே இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. அதாவது இந்த ரெயில் திண்டுக்கல்லில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படுகிறது.
நெல்லையில் இருந்து திண்டுக்கல் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரெயில் வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை திண்டுக்கல்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரெயில் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை 60 நிமிடங்கள் தாமதமாக பாலக்காட்டிற்கு செல்லும். மேலும் இந்த ரெயில் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் செல்லும். அதேபோல் சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக குருவாயூர் வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை திருவனந்தபுரத்திற்கு 25 நிமிடங்கள் தாமதமாக செல்லும். இந்த ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் வழக்கம்போல் செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story