புளியங்குடி பகுதியில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்


புளியங்குடி பகுதியில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்
x
தினத்தந்தி 4 March 2020 3:45 AM IST (Updated: 4 March 2020 6:19 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

புளியங்குடி, 

தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சோமறந்தான், கோட்டைமலை பீட் பகுதிகளில் யானைகள் கூட்டம் முகாமிட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள், அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல், வாழை, தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புளியங்குடி பீட் பகுதியை ஒட்டியுள்ள அப்துல்வகாப் (வயது 60) என்பவரின் தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்குள்ள தென்னை மரங்களை வேரோடு சாய்த்தன. இதேபோல் அருகே உள்ள காஜாமைதீன் என்பவரது தோட்டத்தின் முன்பக்க கதவை உடைத்து சேதப்படுத்தின. மைதீன்பிச்சை என்பவரது தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்குள்ள தண்ணீர் செல்லும் குழாய்களை நாசப்படுத்தின.

மேலும் புளியங்குடி ஜின்னாநகர் 2-வது தெருவை சேர்ந்த முகம்மது அலி ஜின்னா (65) என்பவரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களையும் சாய்த்து நாசம் செய்தன. இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின், வனவர் அசோக்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.

மேலும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மூட்டியும், பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யானைகளை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்ட வேண்டும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ந‌‌ஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story