கோவை அருகே போதை மாத்திரை விற்ற என்ஜினீயரிங் மாணவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு
கோவை அருகே போதை மாத்திரை விற்ற என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீவிர கண்காணிப்பு
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் கஞ்சா, போதை காளான், போதை ஸ்டாம்பு, போதை மாத்திரை போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
இதைத்தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கோவை மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் இதற்காக அமைக்கப் பட்ட தனிப்படை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போதை மாத்திரை
இந்த நிலையில் கோவை அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப் படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அவர்கள் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை துரத்தி சென்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.
கல்லூரி மாணவர் கைது
பிடிபட்ட நபரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமதுஇர்பான் (வயது20) என்பதும், இவர் கோவை அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதும், அவர், தடை செய்யப்பட்ட போதை மாத்திரையை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து 5 கிராம் போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய நபர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் என்பதும், அவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டு வலையில் சிக்கும் மாணவர்கள்
இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் கூறியதாவது:-
எம்.டி.எம்.ஏ. என்று அழைக்கப்படும் இந்த போதை மாத்திரை அதிக போதையை கொடுக்கக்கூடியது. சிறிதளவு உபயோகித்தாலே 48 மணி நேரம் போதை இருக்கும். எனவே இந்த மாத்திரை ஒரு கிராம் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. பிடிபட்டவரிடம் 5 கிராம் போதை மாத்திரை இருந்தது. அது அவருக்கு எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை.
Related Tags :
Next Story